Thursday, December 23, 2010

சிலந்தி வீடு !!



வீட்டின் தெற்கு மூலையில்
ஓர் சிற்றெரும்பு அந்தரத்தில்
தொங்கிக் கொண்டிருந்தது..

உற்று கவனிக்கையில்
பின்னப்பட்டிருந்த
சிலந்தி வலையில்
சிக்கிய அவ்வெறும்பு
மரித்திருந்தது..

அதன் மறுபுறத்தில்
ஓர் சிலந்தி தன் இருப்பை
இழைத்து கொண்டிருந்தது..
அப்போதே இழைக்கப்பட்ட
அதன் வலையின் மினுமினுப்பு
நெசவு நெய்தலை
ஒத்திருந்தது...

எட்டுக் கால்களில்
ஒவ்வொன்றையும்
விதம் விதமாய் அசைத்து
உள்ளும் புறமும் உந்தியது..
மெல்லிய இழையொன்றை
லாவகமாய் இழுத்தபடி
வேறொன்றில் இணைத்தது..

இப்படியாய்
பட்டா ஏதுமில்லாமல்
வெற்றிடத்தை ஆக்கிரமித்து
சுவற்றின் மூலையை
அகன்ற வலை ஒன்றால்
நிரப்பியது..

காற்றின் ஸ்பரிசத்தில்
மென்மையாய் மிதந்த
அம்மெல்லிய வலை
அறுந்து விட்டிருக்கவில்லை...

செங்கற்கள் மண்
அஸ்திவாரம் பூச்சுக்கள்
ஏதுமில்லாமல்
தன்னை மட்டும் கொண்டு
தரித்த அதன் இருப்பினை
ஏனோ கலைக்க இயலாமல்
விட்டுச் சென்றேன்..

Monday, November 29, 2010

காய்ந்த ரொட்டித் துண்டுகள்!!



எனக்கானதோர் இடம்
எப்படியாகினும்
ஒதுக்கப்பட்டே ஆகிறது
இரயிலிலோ பேருந்திலோ
திரை அரங்குகளிலோ...

நீள் கயிற்றின் மேல்
கண் கட்டி நடந்தும்
தப்பட்டையின் இசைவுக்கேற்ப
பல்டி அடித்தும் வித்தை காட்டும்
சிறுமியொருத்தி ஏறினாள்
ஓர் பேருந்தினுள்...

அவளின் அழுக்குற்ற ரோஸ் நிற
பூப் பூத்த பாவாடையும்..
கழுத்து முழுதும் படர்ந்த
பாசி மாலைகளையும் கண்டு
ஓர் மழலை சிரித்தது

அவரவர் காலியிடப்பட்ட
பக்கத்து இருக்கைகளை
பத்திரமாய் பார்த்துக்கொண்டனர்
அவள் அமராதபடி....

சிலர் பெட்டிகளை வைத்தும்
வெகு சிலர் விசாலமாய் அமர்ந்தும்
இன்னும் சிலர் குழந்தைகளை
இருக்கைகளில் அமர்த்தியும்
கவனமாய் இருந்தனர்
அவள் தீண்டிவிடாதபடி...

அவளது கண்கள் சுற்றிலும்
நோட்டம் விட்டபடியே இருந்தது
வெற்றிருக்கை தேடியோ அல்லது
மனிதத்தை தேடியோ....

தடித்த பெண்ணொருத்தி
இரண்டு ரொட்டித் துண்டுகளையும்
நசுங்கிய வாழைப்பழமொன்றும்
கொடுத்தாள் அவளிடம்..
தான் இடம் தர மறுத்ததை
சரி செய்துவிட்டது போல்

புன்சிரிப்பை உதிர்த்து
வாங்கினாள் அச்சிறுமி
அங்கே
கண்கட்டு வித்தை பரிமாறப்படுகிறது
என அறியாமல்....

இன்னும் நெடுந்தூரம்
போக வேண்டியிருந்தது
அப்பேருந்து....

Sunday, October 17, 2010

கனவின் நிறம் !!



நீள் பாதையில் பூத்திருக்கும்
பெயர் தெரியா பூக்கள்
பறக்கும் மேகம்
உதிரும் நட்சத்திரம்
கருஞ் சிவப்பில் உலகம்

பெரும் நகரத்தினுள்
வழி தொலைத்து
அலைந்து திரிந்து
தேடலின் போது கண்
விழித்துக் கொண்ட தருணம்..

சர்ப்பங்கள் பிணைந்த காடு
நீரினில் மிதக்கும் நிலவு
காசுகள் புதைந்த நிலம்
பிணங்கள் குவிந்த சாலைகள்
என
நடு இரவினில் திறக்கும்
கனவுச் சிறையினில்
பல பல கனவுகள்
வர்ணம் தீட்டி
விடுபடுகின்றன..
சிறு கவிதைக்கு
வித்திட்டுச் செல்கின்றன...

Tuesday, August 24, 2010

தினமொரு ராஜகுமாரன்..!!



சன்னல் சட்டங்களை
பற்றியபடி
பதிந்த விரல்கள்..
சற்று மேல்
இரு புள்ளியாய்
சிறுத்த கண்கள்
எப்பொழுதும்
தென்படுகிறது
அவ்வீட்டினில்...

அக் கண்களின் ஏக்கங்கள்
வாடைக் காற்றை கிழித்து
நேர் கோடாய்
நிறுத்தப்படுகிறது
அவ்வீதியினில்...

நிரம்பப்பெறா
ஆசைகளைக் கொண்டு
நிரப்பியிருந்தது
அவள் வயது
நா வெட்டென...

கரு வனத்தினுள்
முளைத்த
வெண் கம்பிகளும்..
வலிகள் பிரசவித்த
கோடுகள் பதிந்த
முகமுமே
நிர்ணயித்தன
அவளது விலையை...

பரிகாரங்கள்
ஏதுமில்லா அவளது
கோவில் பிரவேசங்கள்
சாட்சியாயிருந்தன
செவ்வாய் தோஷமும்
இல்லையென..

பூச்சுகள் உதிர்ந்த
சுவர்களும்
கம்பிகளில் தொங்கும்
நிறம் மங்கிய கிழிசல்
ஆடைகளும்
ஒப்புக்கொண்டன
இயலாமை என்பதை...

ஆனந்த பைரவி
கல்யாணி ராகங்களில்
அரும்பிய காதல்களை
சஹானாவிலும்
முகாரியிலும்
தொலைத்திருந்தாள்..

எவர் பிடிக்கவில்லை
என்றாலும் அவள்
விசனப்பட போவதில்லை...

சன்னல் சட்டங்களுக்கு
அப்பால் செல்லும்
ஏதோ ஓர் ஆண்மகன்
அவளது
அன்றைய இரவின்
ராஜ குமாரனாய்
இருக்கப் பெறுகிறான்...

தற்காலிகமாய் அது
போதுமானதாகியிருந்தது
விதி எழுதிய
அவளது வலிகளை
அழிக்க...

எப்பொழுதாவது
அவ்வீதியின் வழியே
நீங்கள் போக நேரிடலாம்...

அவள் விடுத்த
கனவுகளும் ஆசைகளும்
வீதியில்தான் அலைகிறது..
அதன் வாசத்தை நீங்கள்
நுகர நேரிடலாம்...
அதன் மீது
மோதிட நேரிடலாம்...

அவ்வாறெனில்...
ஒரு கணம்
அச் சன்னலை
பார்த்துவிட்டுச்
செல்லுங்கள்...

அன்றிரவு
அவள் கனவின்
ராஜ குமாரன்
நீங்களாகவும்
இருக்கலாம்...!!!

Friday, July 30, 2010

தலைப்பற்ற கவிதையாய்...!!!


ஒற்றை தென்னை ..
அதனை வைத்திருக்கும்
சிறு நதி ஒன்று..
தனிமையில் உனக்காய் நான்..

சூரியன் வீசியெறிந்த
மஞ்சள் நிறம்
வானம் முழுதும்
சிதறுகிறது மென்மையாய்....

சொடுக்கெடுக்கும்
என் விரல்கள்
களைத்துப் போகின்றன...

கூடவே..
ஒற்றை தென்னையும்
அந் நதியும்
விசனப்படுகின்றன உன்னை
விசாரித்தபடியே ...

வர்ண கலவைகளில்
சேர்க்கப்படா
புது நிறமொன்றில்
தீட்டப்படுகின்றது
நிறமற்ற
நமது நாட்கள்...

உன் பார்வை என் மீது
வீசப்படுவது
தகிக்கின்ற வெப்பத்தினுள்
சில்லிடும் காற்று
புகுவது போன்றது..

புள்ளியினுள் பயணித்து
வரையப்படுகின்ற
கோலத்தினில்
விழுகிறது மழைத்துளி..
சலனப்பட்ட
என் மனம் போல்...

நதிக் கரையின்
கானங்களில் உன்
வாசம் படர்கிறது
அதனை....
அறிவித்தபடி காற்று
என் மீது நெடியதாய்
உனது வாசத்தை
படர்த்திவிட்டுச் செல்கிறது....

சிவக்கின்றேன் நான்...
சில்லிட்டுக் கொண்டிருந்தது
இத் தருணம்...

யாதொரு பெயருமிடாமல்
நீள்கிறது நம் உறவு...

Tuesday, July 20, 2010

பிரிந்துவிட்டிருந்த நீ....



விழி மூடும் தருணங்களில்
பிரபஞ்சத்தை நோக்கி
பயணிக்கறேன் உன்னை
தேடுதலின் பொருட்டு

காகம் குருவிகளிலும்
பறக்கும் பட்டாம் பூச்சியினுளும்
ஊரும் புழுக்களிலும்
தேடுகிறேன் உன்னை...

மலர்ந்த பூ
விரியா மொட்டுக்கள்
பட்ட மரம் என
எவற்றிலும்
தேடுகிறேன் உன்னை..

நீலம் போர்த்திய
கடலின் பேரமைதி
உணர்த்தியது நீ
அங்கு இல்லை என..

வெண்பஞ்சு பதிந்த
மேகத்திலும் அலைகிறேன்
கிரகங்கள் ஒன்பதும் நீ
இல்லையென பிதுக்கியன

உன் உருவத்தை
ஆட்கொண்ட அக்னியிடம்
வினவுகிறேன்..
அருவமான உன்னை
நிரப்பிய வெற்றிடத்தையும்
விசாரிக்கறேன்..

சிப்பிகள் விடுத்த
சப்தத்தினை ஒத்த
உன் சிரிப்பின்
ஒலிகளும்...
நீ
உச்சரித்த வார்த்தைகளும்
கலந்த காற்றிலும்
விசாரிக்கறேன்...

விழி திறந்து பார்க்கிறேன்..

எதுவாகவும் நீ இல்லை..
அப்படி எனில்
நீ என்பது எங்கே?

Thursday, July 15, 2010

கனவின் புதிர்..!!




கூரியதாய் நீல விழிகள்
விரிந்த நீள் மயிர்கற்றைகள்
இரு மூங்கில் மர உயரமென

கரிய நிறத்தில்
ஐந்து கைகள் கொண்ட
பிரமாண்டமான ஜந்து
ஒன்று என் கனாவில்
இம்சித்தது சமீப காலமாய்..

நான் போகுமிடமெல்லாம்
துரத்துகிறது...

நான் ஒளிய எத்தனிக்கையில்
விரல்களி னிடுக்கிலிருந்து
அடர் திரவ மொன்றை
பீய்ச்சியது என் மேல்...
அதன் வேகத்தில்
தூக்கி எறியப்படுகிறேன்...

விருட்சமாய் வளர்ந்து
என்னை ஆக்கிரமிக்கிறது..
அதன் பிடியிலிருந்து
மீள முடியாமல் கதறுகிறேன்...

திடுக்கிட்டு விழிக்கிறேன்
கனவின் தாக்கத்திலிருந்து

கணவன்
என்றோ பார்த்த படத்தின்
வெளிப்பாடு எனவும்

அலுவலகத் தோழிகள்
அச்சத்தின் வடிவம் எனவும்

அம்மா
கோவிலுக்கு சென்று வா
எனவும்

விதவிதமான விளக்கங்கள்
யோசனைகள்
பெறப்பட்டது...

என் இரு வயது பிள்ளையின்
புன்னகை நிம்மதியை
மீட்டும் என
கொஞ்சி மகிழ அது
விலகிச் செல்கிறது
விருப்பமில்லாமல்...

நான் யாரென
என் பிள்ளையிடம்
அடையாளப் படுத்தப்படுகிறது
மாத விலை கொடுத்து
கொணரப்பட்ட
வளர்ப்புத் தாயினால்..

விழுங்கிய உணவு
இரைப்பையை
தின்பது போல்
உணரப்படுகிறேன்...

இனி....
ஏதும் இடையூரற்ற முழு
பொழுதுகளை என்
குழந்தை கொண்டு
நிரப்புகிறேன் ..

அவள் இயக்கும்
பொம்மையாய்
உருப் பெற்றிருக்கிறேன்..


இப்பொழுதெல்லாம்
நீல விழிகள் விரித்த மயிர்
கொண்ட ஜந்து என்
கனவில் வருவதில்லை...

Wednesday, July 7, 2010

மீண்டும் ஓர் தொடர்ச்சிப் புள்ளியாய்...!!


பிரிவதற்காய் ஒதுக்கப்பட்ட
மாலை நேரம் அது
எதிர் நோக்கப்பட்டது
நம்மிருவராலும்...

செந்நிற பொழுதினில்
நீயும் நானும்
கூடி முடிவெடுத்தோம்
பிரிந்துவிடுவதென...

பேசுவதற்கென ஆரம்பிக்கும்
பெரும் நேரங்கள்
பிரிவுகளிலேயே
முடிவுறுகின்றன...

காதல் பார்வைகள்
உள்ளங்கை ஸ்பரிசங்கள்
ரகசிய முத்தங்கள்
என எதுவும்
பரிமாறப்படுவதற்கில்லை...

குறுஞ்செய்திகள்
அகால அழைப்புகள்
இனி இல்லை என
இருவர் எண்களும்
அழிக்கப்படுகின்றன
அவரவர் அலைபேசியில்...

எப்பொழுதும் பார்க்கக் கூடாதென
முடிவும் செய்தாகிவிட்டது..

உன்னை... நம் காதலை
மறந்தாகவே வேண்டுமாய்
ஒவ்வொரு நொடியையும்
துரத்துகிறேன்...

உனக்கு பிடித்தமானதை
பார்க்க நேரிடாது
கவனமாய் இருக்கிறேன்..

உனை மறத்தல் என்பது
அப்படியொன்றும்
அவஸ்தை இல்லை என
வெளிக்காட்டிக் கொள்கிறேன்...

உனது மிக பிடித்தமான
ஓய்ந்த பெருமழை
தெளிந்த வானம்
துடைத்த சாலை
சிலிர்த்த அரும்புகள்
ஒற்றையடி பாதை
என் கனவுகளில் தினந்தோறும்
ஓடியாடுகின்றன...
அவற்றை துரத்துகையில்
என்னை பழிக்கின்றன..

தூக்கம் தொலைந்த ஓர் இரவில்
அழித்துவிட்டிருந்த உனது
அலைபேசி எண்களை
சேகரிக்க முயன்று
தோற்று போன வேளையில்
உன் அழைப்பு முந்திவிட்டிருந்தது..

கண்களில் துளிர்த்த துளிகள்
மீண்டும் ஓர் தொடர்ச்சிப் புள்ளியாய்...!!
முற்று பெற்றிருந்தது ஒரு மௌன யுத்தம்..

Friday, July 2, 2010

வெறுமையினுள்,,,!!



மழைத் துளி கனத்த
ஓர் நாள்தான் நான்
வெறுமையை உணர்ந்தேன்..

சிறுவர்களின் சப்தங்கள்
வாகன இரைச்சல்கள்
அண்டை வீட்டாரின்
சண்டைகள்
என ஏதுமில்லா
வெறுமையினுள் புகுந்துள்ளேன்...

தினசரிகள் தீண்டப்படவில்லை
நாளிதழ்கள் புரட்டப்படவில்லை..
வீட்டினுள் ஏதும்
கலைக்கப்படவில்லை..
மனம் மட்டும் நிதமும்
துவைத்து பிழியப்படுகிறது...

காற்றினுள் வெறுமை
கூடியிருப்பதை
சுவாசத்தில் உணர்கிறேன்..
அது நுரையீரலையும்
அடைத்து நிரப்புகிறது....

மழைகளின் விசாரிப்புகள்
பேரிரைச்சலாய் உரைத்தது..

பாதை ஏதுமற்ற
காட்டினில் அலைகிறேன்..
தடுமாறுகிறேன்..விழுகிறேன்..
எதை தேடுகிறேன் எனவும்
மறந்து விடுகிறேன்....

சுருதி சேரா ராகத்தினை
மீட்டுவது போலிருந்தது
நான் தனிமையில்
உண்பதும்..உறங்குவதும்...

கடுங் குளிரில்
விடப்படும் மூச்சுக் காற்று
போதுமானதாகியிருந்தது..
கதகதப்பிற்கு..

இன்னும் பெய்து கொண்டுதான்
இருக்கிறது மழை.!!!

Monday, June 21, 2010

நிகழ்வு..!!



தற்சமயமே நிகழ்ந்திருக்ககூடும்
அந் நிகழ்வு..

பால்காரனின் கிண்கிணி
சப்தத்தின் போதோ..

வெண்ணைய்காரியின்
கூவலின்போதோ..

சளக் சளக் கென ஓர்பெண்
வாசல் தெளிக்கும்போதோ..

யாரோ ஒருவர்
அன்றைய நாளிதழின்
வாசம் நுகர்ந்த போதோ..

இருசக்கர வாகனமொன்று
வேகமென கடந்த போதோ..

ஆனால் வெகு தற்சமயமே
நிகழ்ந்திருக்ககூடும்...

அசைவு அடங்கிய
பட்டாம் பூச்சியின்
ஸ்பரிசம் பெற்றிருந்தது
நடுச் சாலையொன்று!!

Monday, June 7, 2010

இயல்புக்கு பின்....!!!!




தீபாவளி நேரம்.....
தீபங்களின் மின்மினிகள்
வெடிச் சத்தங்கள்
வான வேடிக்கைகள்
இவை யாவுமே
பாதிக்கவில்லை
அவ் வகதி முகாமில்...

அங்கே சிறுமி ஒருத்தி
அகதியாய்-அவள் வயது
எட்டு இருக்கும்....
சிதறா சிந்தனையில்
வெறித்து நோக்கினாள்
கடலினை நோக்கி....

அவள் அருகில் சென்றேன்..
"பட்டாசு வெடிக்கலையா?"
என்னை ஒரு கணம்
உற்று நோக்கி
மீண்டும் வெறித்தாள்
கடலை நோக்கி.....
"பிடிக்கவில்லையா"??
இல்லை என்று
தலை ஆட்டினாள்..

அவள் சூழ்நிலை
மாற்ற விரும்பினேன்...
"கண்ணாமூச்சி ஆடலாமா?"
வாய் திறந்தாள்...
"அப்படி எண்டால் என்ன?"
"நீ ஒளிந்து கொள்...
நான் தேடுகிறேன்"-என்றேன்
"இதைத்தான் எங்களது ஊரில்
நிதமும் செய்யறம்"

சுருக் கென்றது
சுடு சொல் வதைத்தது..

பின் அவளே தொடர்ந்தாள்...
"வெடிச் சத்தம் கேக்கயில்
நிலத்தில் தோண்டிய
குழிகளில் பதுங்குவம்
வயல்களுக்கு உரம்
தெளிப்பது போல
வெடிகுண்டுகளை
வான ஊர்தியிலிருந்து
வீசுவர்...
உங்கள போல் அங்கே
சுதந்திரமாய்
நடக்க இயலாது
நானும் எண்ட தோழியும்
கதைத்துக் கொண்டே நடக்கையிலே
கண்ணிவெடியில்
கால் வைத்து
குழைந்து போனள் அவள்..
கதறியபடி நான்.....

ஒரு மாலை நேரம்
வெடிச் சத்தம் கேக்க...
சாப்பிட்டுக் கொண்டிருந்த நாங்க
பதுங்கு குழிக்குள்
ஒதுங்க வெளியே வந்தம்
"நீங்கள் போங்கள்
செய்து வைத்த
உணவு கொண்டு வாறன்"
எண்டு அம்மா மீண்டும்
சென்றள் வீட்டினுள்...

பதுங்கு குழியில்
பதுங்கியபடி
பாத்துக் கொண்டிருந்தம்
அம்மா வருகையை...
இருகைகளிலே உணவோடு
இரைப்புடன் ஓடி வந்தள்...

பாதி தூரத்தில்
பாவிகளின் குண்டுகளில்
வெடித்துச் சிதறினள்
எண்ட அம்மா..!!

எண்ட நான்கு வயது தம்பி
அறியா சிறுபிள்ளை அவனுக்கு
ஒண்டும் விளங்கயில்லை
சிறிது காலத்தில் அவனும்
செத்துப் போனன் உணவின்றி

இண்டைக்கு
என் அப்பா எவ்விடம்
ஏதும் அறியலை"

சொல்லி முடித்தாள்..

கண்ணீர் வழிய
வெறித்துப் பார்த்தாள்..
சிறு மௌனத்திற்கு பின்
நான் கூறினேன்...
"கவலை படதே ஒருநாள்
காலம் கனிந்து வரும்
நீயும் விளையாடுவாய்
சுதந்திரமாய் பார்
இயல்புக்கு பின்."

என்னை நோக்கினாள்
ஆழமாய் அவள்...
வெறுமையாய் சிரித்தாள்...
தொண்டைக்குழியை
அடைத்த அவளின்
துக்கங்களை மீறி
மெதுவாய்
வெளிப்பட்டது அவளது
வார்த்தைகள்...
"இயல்புக்கு பின்??...
இதுவே இயல்பாகி போனது...!!"

எனக்கு வலித்தது
அவள் வார்த்தைகள்...

அன்புடன் பொய் !!!



இரு கண்கள் விரிந்து
சிறு விரல் அசைத்து
மழலையினுள் எழும்
வியாக்கானங்கள்...

காதலன் காதலியை
உருவகப்படுத்தும் படிமங்களும்....

எதுகையில் பிடித்து
மோனையில் கோர்த்து
நீளும் கவிதைகளென..

நிலாபொழுதினில்
நினைவூட்டபடும்
நிலவினுள் நிலவும்
பாட்டியை பற்றியதாகினும்..

கடன் கேட்டோ கொடுத்தோ
கழிப்பவரின் வருகையை
சாத்தப்பட்டேயிருக்கும்
கதவும் அதன் இடுக்குகளில்
மறைக்கப்பட்ட உண்மைகளும்...


ஊர்ஜிதப்படுத்துகின்றன....
வகையான பொய்கள்
வரவேற்கவேபடுகின்றன
எப்பொழுதும் யாராகினும்..


Tuesday, April 20, 2010

காற்றாகிய நான் .




தனிமை சுவாசத்தை
விரும்பி சுவைக்கும் நீ
வலிய வெதும்புகிறாய்
இழந்த ஒற்றை சிறகிற்காய்
திசை தெரியா பறவையின்
உணர்தலுக்கு நிகர்போல்..

கிழித்தெறியப்பட்ட முகமூடியின்
துணுக்குகளில் ஒட்டியிருக்கும்
நச்சினால் நிறமிழந்தபடியே
காற்றாகிய நான்
இருள் அப்பியிருந்த
உன் அறையினுள்
தூசி படர்ந்த ஒளியாய்
நுழைகிறேன் மெல்ல...

எப்பொழுதும் போல் அப்பொழுதும்
அதே பார்வையில் நிதர்சனமாய்
வீசப்படுகிறேன் உன் மேல்...

Friday, April 16, 2010

முரண்



நெடு நாட்கள் பின் காண
நேரிடும் முன்னாள்
காதலனை -பேச
நிகழுமொரு சந்தர்ப்பம்தனை

விரல்களை பிசைந்தோ
கைப்பையை துழாவியோ
அசௌகர்யத்தை உணர்த்த...

அவனும் உணர்ந்து
அவளைகடக்கிறான்
ஓர் வழிப்போக்கனாய்..

தூரம் கடந்த பின்
திரும்பி பார்த்து
நலம் விசாரிக்கிறது
அவர்கள் பார்வைகள்
ஏனோ ஏக்கமாய்...

மறக்கப்பட்ட காதல்கள்
ஜீவித்துக் கொண்டுதான்
இருக்கின்றன இன்னொருவனை
மணக்கும்போதும்....

காதலனையே மணந்துபின்
காலம் கொடுத்த
உண்மைகளை -வலிய
மறுக்கப்பட்டபோதிலும்....

திணிக்கப்பட்ட
யதார்த்தங்கள்
கசந்து உமிழத்
தொடங்குகின்றன ...

கழட்டி எறியப்பட்ட
அவர்களின் முகமூடிகளில்
மிச்சமிருந்த காதல்களும்
மரணித்துக் கொண்டிருக்கின்றன...

Tuesday, March 30, 2010

மௌனமென்னும் ப்ராய்ச்சித்தம்



ஓயாது பேசிய சொற்கள்
ஓய்வெடுக்கின்றன
அவளிடம்...

பூ விற்பவளிடமும்
காய்கறிகாரனிடமும்
சண்டையிட
தோன்றுவதில்லை
அவளுக்கு..

இப்பொழுதெல்லாம்
மௌனம்
தேவை எனப் படுகிறது
அவளுக்கு...

கதவின் அழைப்பு மணி
ஒலிக்க நேர்கையில்
அவனாக இருக்க வேண்டுமென
அடம் பிடிக்கிறது
அவள் மனம்..
ஏமாற்றத்திலேயே
முடிவடைகிறது ஒவ்வொரு
கதவு திறப்பின் போதும்...

அவனுள்
நெருஞ்சி முள்ளாய்
நெருடி இருக்கக் கூடும்
அவளது கூர் சொற்கள்

உஷ்ண வார்த்தைகளை
உதிர்த்த பின்தான்
உணர்கிறாள் அவனது
காயத்தின் ஆழத்தை..


சில காயங்களை ஆறவிட
மௌனம் எனும் மருந்து
தேவைப் பட்டே ஆகிறது..
தவற்றிற்கு தேடும்
பிராய்ச்சித்தம் போல்..


Friday, March 26, 2010

உனது நட்பின் விளிம்பில்.....



நமது நெடுந்தூர
பயணத்தின் போது
விடுபட்ட வார்த்தைகளை
மிச்சமிருந்த சிநேகங்களை

ஒற்றை வரியில்
ஒரு நிலா பொழுதில்
அலைபேசியில்
அனுப்பி வைத்தாய்...
"ஐ மிஸ் யு" என...

உனக்கான காதலை
அழகாய்தான் புரிய வைத்தாய்
குறுந்தகவலில்...

உன் அடுத்த அழைப்பில்
என்ன பேசுவது என
தெரியாமல் நான்
வெக்கப்பட்டுக் கொண்டிருந்த
சமயம்...

உனது அழைப்பு
கண் சிமிட்டியது என்
அலைபேசியில்...

Wednesday, March 24, 2010

பகல் கனவுகள்..!!!



கரை படிந்த பற்களினூடே
வெறுமையுடன் சிரித்து
வியர்வையில் கண்ணீரும்
கலந்து வெளியேற
வெறும் பாதம் தேய
வீதியில் கூவி பழங்களை
விற்கிறான் அவன்

வட்டிகளை அடைத்திடனும்
சிறு வீடொன்று கட்டிடனுமென
கனவுகள் நிறைய அவன்
கண்களில் தெரிய
நடத்துகிறான் நாட்களை....

பட்டிணத்தில் படிக்கும் மகன்
மன சுமையை இறக்குவானென
தலையில் சுமையை
தாங்கியபடி கூவி
கொண்டே செல்கிறான் அவன்...

தந்தையின் கனவறியா மகன்
தறி கெட்டு செல்லும் பாதைக்கு
வழி கேட்டு செல்கிறான்..
மது மாது போதையில் தந்தைதன்
உணர்வுகளை எரிக்கிறான்..

தந்தையின் கனவுகளை
வீதியில் விற்கிறான்...
விடை தெரியா கனவுகள்
விடை பெற்றுக் கொள்கிறது
மெல்ல மெல்ல.....

Tuesday, March 9, 2010

ஒற்றை காட்டுப் பூ !!!




சிறு ஓடையின்
சல சல வென
ஓட்டத்தில்
மென்மையடைந்த
கூழாங்கற்கள்
ஓடையுடன் இசைந்து
தாளமிட....

பட படவென
பறந்த பறவைகள்
விட்டுச் சென்ற
சிறகுகள்
காற்றில் நடனமாட

குட்டி ஒன்றை
தொலைத்த மானொன்று
திரிந்தாட...

இரவு பகல் பார்த்தறியா
ஊர்ந்து வரும் ஜந்துக்கள்...

வேட்டை முடிந்து
இளைப்பாறும் மிருகங்கள்.....
மீதமான சதைகளை
நோட்டமிடும் வல்லூறுகள்...

இரவினில் அலறும்
ஆந்தை கூட்டமொன்று
திகிலை பரப்பியது...

நிலவின் கரிசனம்
காய்ந்த சிறகுகளின் மீதும்
பட்டு ஜொலித்தது..
மரங்களின் சண்டைகளில்
பற்றி எரிந்தது காடு...

இத்தனை ஆரவாரங்களிலும்
மயான அமைதிகளிலும்
ஓசை இல்லாமல் பூத்த
ஒற்றை பூ காட்டினையே
மணக்கச் செய்ததாம்!!!

Wednesday, February 17, 2010

வீரியம் யாதென....



உனது கடின வார்த்தை
பிரயோகித்தலில்
நீரினுள் அமிழ்த்தப்படும்
பொருளினால் மேலெழும்பும்
நீர்குமிழ் போல்
உனக்கான பதிலடிகள்
எழுந்தமர்கின்றன.....

மறுநொடியில் எதிர்வரும்
பின்விளைவுகளை
பிரித்தாராய்ந்து சிறு
புன்னகை உதிர்க்க
எத்தனிக்கையில்
அதுவும் உன்னை
ஆத்திரப்படுத்தும் என
யோசித்தேன்....

உனது நோக்கம் என்னை
காயப்படுத்துதலேயன்றி
காரணிகளை
நியாயப்படுதுதல் அல்ல
என அறிந்து
ஒரு கண்ணீர்துளியை
விட்டுச் சென்றேன் ...

அது உன்னை
திருப்தி படுத்தகூடும்...
உன் உதட்டோர
குறுநகையை
வரவழைக்க கூடும்...

(எனது கவிதை வெளியிட்டமைக்கு நன்றி -அக நாழிகை)

Tuesday, January 5, 2010

அவளாகிய தூண்டில் மீன்!


அவ்விருண்ட வீட்டிற்குள்
அவள்.....
கண்களில் வெளிப்பட்ட
கண்ணீர் தடம்
பதிந்து உலர்ந்து
கோடிட்டிருந்தது

நிலைக்குத்திய பார்வையில்
அடுத்து வருபவன்
எத்தகையவன் என்ற
மிரட்சி தென்பட்டது

எச்சிலை காணாமல்
நா வறண்டிருந்தது
மூச்சின் வெப்பம்
தாளாமல் தகித்தது
பிய்ந்திருந்த மேலுதடு

அம்மனையின்
அடியாட்களின்
தடியடியில் கன்றி
தடித்திருந்தது அவள்
கால்கள்!!

முன்னிரவில் நிகழ்ந்த
ஓர் மிருகத்தின்
மூர்க்கத் தாண்டவத்தில்
தோற்றுப் போயிருந்தன
பழக்கப்படாத அவளின்
பச்சை உடலும்,மனமும்

அடி வயிற்றில் ஏற்பட்ட
தாளா வலியினை
தன்னிச்சையாக
தடவிக்கொண்டிருந்தன
அவள் கைகள்!

இருள் ஒளி
பாராமல் நடந்த
வதைகள் மனதை
பதைத்துக் கொண்டிருந்தது!

கவனிப்பாரின்றி
கிடந்தது
அவளுக்குண்டான
பணமும்,உணவுகளும்....

கலைந்த கேசமும்
களைந்த ஆடையுமாய்
அவள் .....

அவள் முகம்
வெளிறிப் போயிருந்தது
அவ்வறையின் கதவு
மற்றொரு முறை

திறக்கையில்!!!!!!!!!!

( உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை )