Tuesday, January 5, 2010

அவளாகிய தூண்டில் மீன்!


அவ்விருண்ட வீட்டிற்குள்
அவள்.....
கண்களில் வெளிப்பட்ட
கண்ணீர் தடம்
பதிந்து உலர்ந்து
கோடிட்டிருந்தது

நிலைக்குத்திய பார்வையில்
அடுத்து வருபவன்
எத்தகையவன் என்ற
மிரட்சி தென்பட்டது

எச்சிலை காணாமல்
நா வறண்டிருந்தது
மூச்சின் வெப்பம்
தாளாமல் தகித்தது
பிய்ந்திருந்த மேலுதடு

அம்மனையின்
அடியாட்களின்
தடியடியில் கன்றி
தடித்திருந்தது அவள்
கால்கள்!!

முன்னிரவில் நிகழ்ந்த
ஓர் மிருகத்தின்
மூர்க்கத் தாண்டவத்தில்
தோற்றுப் போயிருந்தன
பழக்கப்படாத அவளின்
பச்சை உடலும்,மனமும்

அடி வயிற்றில் ஏற்பட்ட
தாளா வலியினை
தன்னிச்சையாக
தடவிக்கொண்டிருந்தன
அவள் கைகள்!

இருள் ஒளி
பாராமல் நடந்த
வதைகள் மனதை
பதைத்துக் கொண்டிருந்தது!

கவனிப்பாரின்றி
கிடந்தது
அவளுக்குண்டான
பணமும்,உணவுகளும்....

கலைந்த கேசமும்
களைந்த ஆடையுமாய்
அவள் .....

அவள் முகம்
வெளிறிப் போயிருந்தது
அவ்வறையின் கதவு
மற்றொரு முறை

திறக்கையில்!!!!!!!!!!

( உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை )