Thursday, July 15, 2010

கனவின் புதிர்..!!




கூரியதாய் நீல விழிகள்
விரிந்த நீள் மயிர்கற்றைகள்
இரு மூங்கில் மர உயரமென

கரிய நிறத்தில்
ஐந்து கைகள் கொண்ட
பிரமாண்டமான ஜந்து
ஒன்று என் கனாவில்
இம்சித்தது சமீப காலமாய்..

நான் போகுமிடமெல்லாம்
துரத்துகிறது...

நான் ஒளிய எத்தனிக்கையில்
விரல்களி னிடுக்கிலிருந்து
அடர் திரவ மொன்றை
பீய்ச்சியது என் மேல்...
அதன் வேகத்தில்
தூக்கி எறியப்படுகிறேன்...

விருட்சமாய் வளர்ந்து
என்னை ஆக்கிரமிக்கிறது..
அதன் பிடியிலிருந்து
மீள முடியாமல் கதறுகிறேன்...

திடுக்கிட்டு விழிக்கிறேன்
கனவின் தாக்கத்திலிருந்து

கணவன்
என்றோ பார்த்த படத்தின்
வெளிப்பாடு எனவும்

அலுவலகத் தோழிகள்
அச்சத்தின் வடிவம் எனவும்

அம்மா
கோவிலுக்கு சென்று வா
எனவும்

விதவிதமான விளக்கங்கள்
யோசனைகள்
பெறப்பட்டது...

என் இரு வயது பிள்ளையின்
புன்னகை நிம்மதியை
மீட்டும் என
கொஞ்சி மகிழ அது
விலகிச் செல்கிறது
விருப்பமில்லாமல்...

நான் யாரென
என் பிள்ளையிடம்
அடையாளப் படுத்தப்படுகிறது
மாத விலை கொடுத்து
கொணரப்பட்ட
வளர்ப்புத் தாயினால்..

விழுங்கிய உணவு
இரைப்பையை
தின்பது போல்
உணரப்படுகிறேன்...

இனி....
ஏதும் இடையூரற்ற முழு
பொழுதுகளை என்
குழந்தை கொண்டு
நிரப்புகிறேன் ..

அவள் இயக்கும்
பொம்மையாய்
உருப் பெற்றிருக்கிறேன்..


இப்பொழுதெல்லாம்
நீல விழிகள் விரித்த மயிர்
கொண்ட ஜந்து என்
கனவில் வருவதில்லை...

2 comments: