Monday, November 29, 2010

காய்ந்த ரொட்டித் துண்டுகள்!!



எனக்கானதோர் இடம்
எப்படியாகினும்
ஒதுக்கப்பட்டே ஆகிறது
இரயிலிலோ பேருந்திலோ
திரை அரங்குகளிலோ...

நீள் கயிற்றின் மேல்
கண் கட்டி நடந்தும்
தப்பட்டையின் இசைவுக்கேற்ப
பல்டி அடித்தும் வித்தை காட்டும்
சிறுமியொருத்தி ஏறினாள்
ஓர் பேருந்தினுள்...

அவளின் அழுக்குற்ற ரோஸ் நிற
பூப் பூத்த பாவாடையும்..
கழுத்து முழுதும் படர்ந்த
பாசி மாலைகளையும் கண்டு
ஓர் மழலை சிரித்தது

அவரவர் காலியிடப்பட்ட
பக்கத்து இருக்கைகளை
பத்திரமாய் பார்த்துக்கொண்டனர்
அவள் அமராதபடி....

சிலர் பெட்டிகளை வைத்தும்
வெகு சிலர் விசாலமாய் அமர்ந்தும்
இன்னும் சிலர் குழந்தைகளை
இருக்கைகளில் அமர்த்தியும்
கவனமாய் இருந்தனர்
அவள் தீண்டிவிடாதபடி...

அவளது கண்கள் சுற்றிலும்
நோட்டம் விட்டபடியே இருந்தது
வெற்றிருக்கை தேடியோ அல்லது
மனிதத்தை தேடியோ....

தடித்த பெண்ணொருத்தி
இரண்டு ரொட்டித் துண்டுகளையும்
நசுங்கிய வாழைப்பழமொன்றும்
கொடுத்தாள் அவளிடம்..
தான் இடம் தர மறுத்ததை
சரி செய்துவிட்டது போல்

புன்சிரிப்பை உதிர்த்து
வாங்கினாள் அச்சிறுமி
அங்கே
கண்கட்டு வித்தை பரிமாறப்படுகிறது
என அறியாமல்....

இன்னும் நெடுந்தூரம்
போக வேண்டியிருந்தது
அப்பேருந்து....

11 comments:

  1. நெகிழ்வான கவிதை...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உண்மையான வலிகளின் பிரதிபலிப்பு உங்கள் வரிகளில் தெரிகிறது..
    நல்ல வரிகள்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. கவிதை சிறுமி கண்முன் நிற்கிறாள்

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்

    ReplyDelete
  4. ம். ம்... பயணத்தில் கிடைக்கும் வலி ... சொல்லியும் மாளாது ஹேமி

    ReplyDelete
  5. இன்னும் நெடுந்தூரம்
    போக வேண்டியிருந்தது
    அப்பேருந்து...///
    இந்தப் பயணம்
    முடியாது சகோதரி
    ஒருபோதும்.
    காய்ந்து போன வறண்ட
    வக்கிர மனங்கள்
    அடைத்துக் கொண்டிருக்கின்றன
    வாகனத்தின்
    எல்லா
    இருக்கைகளையும்.

    ReplyDelete
  6. தொலைந்துபோன மனிதத்தை அந்தச் சிறுமியுடன் சேர்ந்து நாமும் தேடிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கும் போலிருக்கிறது இனிவரும் நாட்களில்.மாறுவோம், முடிந்தால் மாற்றவும் முயற்சிப்போம். வலிகளை பரிமாறிய கவிதையுணவாயினும் ருசிக்கவே செய்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி. தொடரட்டும் உங்கள் பயணம்....
    பத்மஹரி,
    http://padmahari.wordpress.com

    ReplyDelete
  7. @ராஜா
    மிக மிக நன்றி..உங்கள் பின்னூட்டத்திற்கு..
    @அரசன்
    மிகவும் நன்றி உங்கள் வாசிப்பிற்கு
    @விஜய்
    எனது நன்றிகள் பல உங்களது பின்னூட்டத்திற்கு
    @வேல் கண்ணன்
    உண்மைதான்..நன்றிகள் பல தங்கள் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும்

    ReplyDelete
  8. @சிவக்குமாரன்
    உண்மை பிரதிபலிப்பு உங்கள் பின்னூட்டத்தில்..மிக நன்றி...

    @பத்ம ஹரி
    மிக மிக நன்றி...மாற்றங்கள் மனிதத்திலும் தேவை தான்...மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு

    @கனாக்காதலன்
    நன்றிகள் பல உங்களின் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும்

    @ ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
    மிக்க நன்றி கவிதையின் வலியை புரிந்ததற்கு...நன்றிகள் பல..:)

    தங்கள் அனைவரின் வருகைக்கும் வாசிப்பிற்கும் எனது நன்றிகள்

    ReplyDelete
  9. //அவளது கண்கள் சுற்றிலும்
    நோட்டம் விட்டபடியே இருந்தது
    வெற்றிருக்கை தேடியோ அல்லது
    மனிதத்தை தேடியோ....//
    great lines!

    ReplyDelete