
முகப்பூச்சுக்கள் உதட்டுச் சாயம்
ஒப்பனைகள் ஏதுமில்லா
எனது வெற்று முகமே
ஒரு வித நிம்மதியை தருகிறது
உன்னுள்..
இப்பொழுதெல்லாம்
கண்மை இடுவதில்லை
உன் சந்தேகத்தின்
கூர் ஊசியில் மை
இடுவதையே நீ
வழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாய்
கண்களில் குருதியுடன்
கூடவே நிரம்பி வழிகிறது உன்
குரூரத்தின் சாயம்...
வீடு திரும்பும் ஒவ்வொரு
இரவும் மோப்பமிடுகிறாய்
வேறொருவனின்
வாசனைகளையும் தடயங்களையும்
நுகர்ந்துவிடுவதென...
முன்சாமத்தின் நாயின்
குரைதலுக்கும் என்னை
வினாவாக்குகிறாய்..
எதையும் என்னையும்
பத்திரப்படுத்திவிட்டே செல்லும் நீ
என் காதலை
பத்திரப்படுத்த தவறவிடுகிறாய்...
உன் காதலோ
உருமாறித் தெறிக்கிறது
உமிழப்பட்ட விஷமென..
எவரும் பார்த்துவிடாதபடி
அந்திப் பொழுதிகளில் கடற்கரை
மணலில் தடம் பதிந்த நம்
காதல்களும்..
இருளும் ஒளியுமற்ற பொழுதுகளில்
நெருக்கமாய் அமர்ந்து பேசுவதும்...
கோர்த்த கை விரல்களை
பிரிக்க மனமில்லா கணங்களுடன்
வீடு திரும்புவதும்
எனக்கு நீ உனக்கு நான் என
அழுது புலம்பிய அந்த
அந்திமக் காலங்கள்
மெதுமெதுவாய்
ஏதும் மிச்சமின்றி
இருளில் அமிழ்ந்து
புலரப்படாமலே இருக்கிறது
இன்னும்....



