Tuesday, July 17, 2012
Sunday, June 24, 2012
அழகியும் அதிசய அற்புத அல்லியும்!!
ஏழு மலை ஏழு கடல் தாண்டும்
கதையினைப் போலவே
ஓர் அதிசய அற்புத அல்லியை கொணர
முற்பட்டாள் சிறு தேவதை
அவள் பெயர் அழகி!
முதன் முயற்சியாய் ஆதவன் வருமுன்
ஒரு பூவனத்தில் மலரினும்
மெல்லிய காம்பினை தொடுத்து
நிலவில் கொக்கி போட்டு
அதனைப் பிடித்தபடி ஏறிச்சென்றாள்
வானுலகிள் அவ்வழகி!
அடர்ந்த மழை நடுவில்
மேகத்தினை தொடாமல் புழுவை போல்
ஊர்ந்து நெளிந்து
ஊதா நிற நீர்க் கம்பியை
கண்டுபிடித்தாள்
மழையோடு மழையாக
ஊதா கம்பியை பிடித்து ஓர்
பால் நிற கடலினை அடைந்தாள்
உடலெல்லாம் மீனாகி
நீந்தி கரையை அடைந்த பொழுது
ஒரு யுகம் கடந்தாள்...
கரையின் மேல் அரும்பியிருந்த
ஓர் பெரு வனத்தினுள் உட்சென்று
ஓய்வு எடுக்கும் புள்ளி மானிடம்
அதிசய அற்புத அல்லியொன்று எங்கென
வினவும் நேரமொன்றில்
அவளை விழுங்க ஆயுத்தமானது
ராட்சத சர்ப்பம் ஒன்று...
விருட்டென புள்ளி மானின் கொம்பை
கெட்டியாக பிடித்து
அவள் ஓட
அச்சத்தில் அம்மான் அவளையும் சுமந்தபடி
பறந்து பெரும் புதருக்குள் மறைந்தது- பின்
கோபமுற்ற அம்மான் அச் சிறு
அழகியை கொம்பால் தூக்கி வீசியது
ஓர் ஆழ்பள்ளத்தில்
அந்நீண்ட பள்ளத்தாக்கில்
விழத் தொடங்கினாள் அழகி
கதறிக் கொண்டே அவள் நிலம் சேர்கையில்
அவள் ஆரம்பித்த
பூவனத்திலேயே மீண்டும்
வீழ்ந்திருப்பதைக் கண்டதிர்ந்தாள்...
தேம்பியபடியே நடக்கக் தொடங்குகையில்
கால் இடறி மண்ணில் விழுந்தாள்
பூச் செடிகளின் நடுவே
அவள் கால் தடம் பதிந்த அந்த
அற்புத அதிசய அல்லி
மலர்ந்திருந்தது..
அவள் புன்னகைத்தபடி அதை பறிக்கும் முன்
அயர்ந்த களைப்பால் சிறு இமைகளை மூடி
உறங்கிப் போனாள்..
அவள் கனவினுள்
பிரபஞ்சம் முழுவதும் அல்லிப் பூ
பூத்திருந்தது!!!
நியதி.!!!
ஓர் ஜனனம் அதன் பூக்கள்
பூத்துக் கொண்டேயிருக்கும்!
ஓர் மரணம் அதன் விண்மீன்
விழுந்து கொண்டேயிருக்கும்!
ஓர் காதல் அதன் கைகள்
பிணைந்து கொண்டேயிருக்கும்!
ஓர் காமம் அதன் ஜுவாலை
எரிந்து கொண்டேயிருக்கும்!
ஓர் விதை அதன் மரம்
சுமந்து கொண்டேயிருக்கும்!
ஓர் வனம் அதன் கருமை
படர்ந்துகொண்டேயிருக்கும்!
ஓர் மனிதன் அவன் மனிதம்
மரித்துக் கொண்டேயிருக்கும்!
ஓர் உலகம் அதன் உருவம்
அழிந்து கொண்டேயிருக்கும்!!!!
Saturday, June 23, 2012
தீண்டா பொழுதுகள் !!
சில பொழுதுகள்
தனிமைப் படுத்தப்படுகின்றன.
செய்திகள் பகிரப்படாமல்
துக்கங்கள் நிகழப்படாமல்
மிக நெருக்கமானவர்களின் வருகையின்றி
எவ்வித விசாரிப்புகளின்றி
வெற்றிடமாய்
தீண்டாமலே கிடக்கின்றன..
எவ் வித சஞ்சலமும் சலசலப்பும்
தாரா நாட்கள் சௌகரியம்.
மகிழ்ச்சியின் சோகத்தின் தருணங்களை
நினைவு கூர்வதை போல
ஏதும் நிகழா பொழுதுகளை
எவரும் நினைக்க நினைப்பதில்லை..
Wednesday, June 20, 2012
ஊடல் எனும் மையப்புள்ளி !!
விருப்பு வெறுப்பு என்ற
விளிம்புகளற்ற நம் வாழ்க்கை பாதையில்
ஏதோ ஓர் மையப் புள்ளியில்தான்
நம் ஊடலை இனிதே தொடங்கினோம்..
சுவற்றில் எம்பி விழும் பந்தைப் போன்றே
எதிரெதிர் சொற்களால் தெறித்து
தூர விழுகிறோம்..
திரும்பி வர தயங்கியபின்
கூடலில்லா ஊடலுடன்
எனக்கான பாதையில் நான்!
உனக்கான பாதையில் நீ!
ஏதோ ஓர் விசையின் உந்துதலில்
நின்றபின் உனக்கும் எனக்குமிடையேயான
தூரம் மலைக்க வைத்தது..
எங்கோ தூரத்தில் ஆரம்பித்த
ஊடலின் மையப்புள்ளி
வெறும் காற்றும் புகா சிற்சிறு புள்ளியே
என உணரும் தருணத்தில்
வாழ்வின் மீதிகள்
காத்திருப்பதில்லை அல்லது
மிச்சமிருப்பதில்லை..!!
Thursday, February 2, 2012
சுயம் !!!!

தேட இயலாத பெருங்கூற்றினை
தேடித் திரிந்தாள்..
அது தன்னால் மட்டுமே முடியுமென
நகைத்தாள்....
பின்வரும் யாதொரு நாள்
தன் சுயம் வெளிப்படும் எனவும்
தரணியில் தன் புகழ் விரியு மெனவும்
சொல்லி சொல்லி சிறகு விரித்துப்
பறந்து கொண்டிருந்தாள்...
நாற்திசையில் எய்தஅம்பினால்
குருதி ஒழுகுவதையும் கவனிக்க தவறினாள்
கைகள் கட்டி தான் பாதாளத்தில்
வீழ்வது போல் கனவு கண்டிருந்த வேளையில்
தன் பிம்பம்தனை தொலைத்ததாக
சொல்லிப் புலம்பினாள்
அந்த பின்வரும் யாதொரு நாளில்
தன் சுயத்தை முழுவதுமாய்
இழந்திருந்தாள்!!!
Tuesday, January 10, 2012
ஓர் துரோகம் ஓர் மன்னிப்பு !

சிறுக சிறுகச் சேகரித்த
சுமைகளைக் கொண்டு ஓர்
துயரக் கூட்டினை கட்டியிருந்தேன்
நான்!!!
போகிறப் போக்கில் ஓர்
பெருந் துரோகத்தை
வீசி விட்டிருந்தான்
அவன்.....
ஏமாற்றங்களை உதிர்த்துக் கொண்டே
கண்ணீர்களை கொண்டு நிரப்பினேன்
அக் கூட்டினை..
பெருங் கூச்சலிட்டபடியே இருந்தன
துரோகமும் வன்மமும்...
சிறிதும் பெரிதுமாய்
புலம்பல்கள் ...
பின் நீண்டிருந்த நேரந்தனில்
விசும்பல்கள் வெதும்பியபடியே
உறங்கிப் போயின....
நிசப்தம் தளும்பிய சமயத்தில்
எட்டிப் பார்த்தேன்
ஓர் மன்னிப்பு துளிர் விட்டிருந்தது..
நான் பார்த்து விட்டிருந்த கணத்தில்
நிர்மூலமாகியிருந்தது அக்கூடு!!
Subscribe to:
Posts (Atom)



