Tuesday, August 30, 2011

கூட்டலும்(+) கழித்தலும் ( _ )



கூட்டலும் கழித்தலும்
இல்லாமல் ஏதுமில்லை
கணிதப் பாடமாகினும்
வாழ்க்கையாகினும்....

கூட்டலில் இருக்கப்பெறும்
இணக்கம் கழித்தல்
என்பதில் இல்லை....
அதிலும்
கடன் வாங்கி கழித்தல்
எவருக்கும்
விருப்பமற்றதாகிறது..

கணிதம் போலல்லாது
கொடுத்த கடனை
யாரும் கேட்காமல்
இருப்பதில்லை வாழ்க்கையில்!

சௌகரியங்களை கூட்டிக்
கொள்ளும் நாம் எதையும்
வேண்டாமென கழிப்பதில்லை
அப்படியே கழித்தாலும்
அதை வேறொருவர்
கூட்டிக் கொள்கிறார்..

கணிதத்தின் ஆதாரம்
கூட்டலும் கழித்தலுமே..
வாழ்க்கையின் ஆதாரம்
அத்தகையதே
ஜனனமும் மரணமுமாய்!!
கூட்டலும் கழித்தலும்
இல்லாமல் எதுவும் இல்லை
கணிதப் பாடமாகினும்
வாழ்க்கையாகினும்

Saturday, March 5, 2011

அதுவானது!!



பிறிதொருநாள் எதிர்பார்த்த
மழையானது
இன்றே தீவிரப்பட்டிருந்தது....
அது
முழுக்கக் கொட்டித்தீர்த்தது
ஓய்ந்து களைத்துப் போனது...

முன் வாசலில்
விரும்பி குளித்த
செவ்வந்தி மொட்டொன்றில்
வழிந்து கொண்டிருந்தது
மிகுதிப்பட்ட
நீரானது...

நீர்த் திவளைகள்
சிதறலாய் வரைந்திருந்தது
கண்ணாடி சன்னலில்

சுவை தேடும் எனது
நாவிற்கும் தேநீர்
கோப்பைக்கும் இடைப்பட்ட
தூரமானது
வெகுநிதானமாய் கடக்கப்பட்டது...

விலக்கி வைத்திருந்த
அவனது எண்ணங்களை
நேரமானது
மென்று கொண்டிருந்தது..

சன்னலின் வழியே
மௌனமாய் தீண்டிய
காற்றானது
அவனது முத்தம்தனை
ஞாபகப்படுத்திச் சென்றது..

அவன் மீதான கோபங்களின்
அடர்த்தி நீர்த்துப் போயிருந்தது...

லேசாகியிருந்தது
வானமானதும்
மனமானதும்...

நாளை
முன்வாசலின் செவ்வந்தி மொட்டு
விரிந்தபின் புன்னகைக்க கூடும்
மேசை மீதிருக்கும் இரு
தேநீர்
கோப்பைகளைக் கண்டு..

Thursday, December 23, 2010

சிலந்தி வீடு !!



வீட்டின் தெற்கு மூலையில்
ஓர் சிற்றெரும்பு அந்தரத்தில்
தொங்கிக் கொண்டிருந்தது..

உற்று கவனிக்கையில்
பின்னப்பட்டிருந்த
சிலந்தி வலையில்
சிக்கிய அவ்வெறும்பு
மரித்திருந்தது..

அதன் மறுபுறத்தில்
ஓர் சிலந்தி தன் இருப்பை
இழைத்து கொண்டிருந்தது..
அப்போதே இழைக்கப்பட்ட
அதன் வலையின் மினுமினுப்பு
நெசவு நெய்தலை
ஒத்திருந்தது...

எட்டுக் கால்களில்
ஒவ்வொன்றையும்
விதம் விதமாய் அசைத்து
உள்ளும் புறமும் உந்தியது..
மெல்லிய இழையொன்றை
லாவகமாய் இழுத்தபடி
வேறொன்றில் இணைத்தது..

இப்படியாய்
பட்டா ஏதுமில்லாமல்
வெற்றிடத்தை ஆக்கிரமித்து
சுவற்றின் மூலையை
அகன்ற வலை ஒன்றால்
நிரப்பியது..

காற்றின் ஸ்பரிசத்தில்
மென்மையாய் மிதந்த
அம்மெல்லிய வலை
அறுந்து விட்டிருக்கவில்லை...

செங்கற்கள் மண்
அஸ்திவாரம் பூச்சுக்கள்
ஏதுமில்லாமல்
தன்னை மட்டும் கொண்டு
தரித்த அதன் இருப்பினை
ஏனோ கலைக்க இயலாமல்
விட்டுச் சென்றேன்..

Monday, November 29, 2010

காய்ந்த ரொட்டித் துண்டுகள்!!



எனக்கானதோர் இடம்
எப்படியாகினும்
ஒதுக்கப்பட்டே ஆகிறது
இரயிலிலோ பேருந்திலோ
திரை அரங்குகளிலோ...

நீள் கயிற்றின் மேல்
கண் கட்டி நடந்தும்
தப்பட்டையின் இசைவுக்கேற்ப
பல்டி அடித்தும் வித்தை காட்டும்
சிறுமியொருத்தி ஏறினாள்
ஓர் பேருந்தினுள்...

அவளின் அழுக்குற்ற ரோஸ் நிற
பூப் பூத்த பாவாடையும்..
கழுத்து முழுதும் படர்ந்த
பாசி மாலைகளையும் கண்டு
ஓர் மழலை சிரித்தது

அவரவர் காலியிடப்பட்ட
பக்கத்து இருக்கைகளை
பத்திரமாய் பார்த்துக்கொண்டனர்
அவள் அமராதபடி....

சிலர் பெட்டிகளை வைத்தும்
வெகு சிலர் விசாலமாய் அமர்ந்தும்
இன்னும் சிலர் குழந்தைகளை
இருக்கைகளில் அமர்த்தியும்
கவனமாய் இருந்தனர்
அவள் தீண்டிவிடாதபடி...

அவளது கண்கள் சுற்றிலும்
நோட்டம் விட்டபடியே இருந்தது
வெற்றிருக்கை தேடியோ அல்லது
மனிதத்தை தேடியோ....

தடித்த பெண்ணொருத்தி
இரண்டு ரொட்டித் துண்டுகளையும்
நசுங்கிய வாழைப்பழமொன்றும்
கொடுத்தாள் அவளிடம்..
தான் இடம் தர மறுத்ததை
சரி செய்துவிட்டது போல்

புன்சிரிப்பை உதிர்த்து
வாங்கினாள் அச்சிறுமி
அங்கே
கண்கட்டு வித்தை பரிமாறப்படுகிறது
என அறியாமல்....

இன்னும் நெடுந்தூரம்
போக வேண்டியிருந்தது
அப்பேருந்து....

Sunday, October 17, 2010

கனவின் நிறம் !!



நீள் பாதையில் பூத்திருக்கும்
பெயர் தெரியா பூக்கள்
பறக்கும் மேகம்
உதிரும் நட்சத்திரம்
கருஞ் சிவப்பில் உலகம்

பெரும் நகரத்தினுள்
வழி தொலைத்து
அலைந்து திரிந்து
தேடலின் போது கண்
விழித்துக் கொண்ட தருணம்..

சர்ப்பங்கள் பிணைந்த காடு
நீரினில் மிதக்கும் நிலவு
காசுகள் புதைந்த நிலம்
பிணங்கள் குவிந்த சாலைகள்
என
நடு இரவினில் திறக்கும்
கனவுச் சிறையினில்
பல பல கனவுகள்
வர்ணம் தீட்டி
விடுபடுகின்றன..
சிறு கவிதைக்கு
வித்திட்டுச் செல்கின்றன...

Tuesday, August 24, 2010

தினமொரு ராஜகுமாரன்..!!



சன்னல் சட்டங்களை
பற்றியபடி
பதிந்த விரல்கள்..
சற்று மேல்
இரு புள்ளியாய்
சிறுத்த கண்கள்
எப்பொழுதும்
தென்படுகிறது
அவ்வீட்டினில்...

அக் கண்களின் ஏக்கங்கள்
வாடைக் காற்றை கிழித்து
நேர் கோடாய்
நிறுத்தப்படுகிறது
அவ்வீதியினில்...

நிரம்பப்பெறா
ஆசைகளைக் கொண்டு
நிரப்பியிருந்தது
அவள் வயது
நா வெட்டென...

கரு வனத்தினுள்
முளைத்த
வெண் கம்பிகளும்..
வலிகள் பிரசவித்த
கோடுகள் பதிந்த
முகமுமே
நிர்ணயித்தன
அவளது விலையை...

பரிகாரங்கள்
ஏதுமில்லா அவளது
கோவில் பிரவேசங்கள்
சாட்சியாயிருந்தன
செவ்வாய் தோஷமும்
இல்லையென..

பூச்சுகள் உதிர்ந்த
சுவர்களும்
கம்பிகளில் தொங்கும்
நிறம் மங்கிய கிழிசல்
ஆடைகளும்
ஒப்புக்கொண்டன
இயலாமை என்பதை...

ஆனந்த பைரவி
கல்யாணி ராகங்களில்
அரும்பிய காதல்களை
சஹானாவிலும்
முகாரியிலும்
தொலைத்திருந்தாள்..

எவர் பிடிக்கவில்லை
என்றாலும் அவள்
விசனப்பட போவதில்லை...

சன்னல் சட்டங்களுக்கு
அப்பால் செல்லும்
ஏதோ ஓர் ஆண்மகன்
அவளது
அன்றைய இரவின்
ராஜ குமாரனாய்
இருக்கப் பெறுகிறான்...

தற்காலிகமாய் அது
போதுமானதாகியிருந்தது
விதி எழுதிய
அவளது வலிகளை
அழிக்க...

எப்பொழுதாவது
அவ்வீதியின் வழியே
நீங்கள் போக நேரிடலாம்...

அவள் விடுத்த
கனவுகளும் ஆசைகளும்
வீதியில்தான் அலைகிறது..
அதன் வாசத்தை நீங்கள்
நுகர நேரிடலாம்...
அதன் மீது
மோதிட நேரிடலாம்...

அவ்வாறெனில்...
ஒரு கணம்
அச் சன்னலை
பார்த்துவிட்டுச்
செல்லுங்கள்...

அன்றிரவு
அவள் கனவின்
ராஜ குமாரன்
நீங்களாகவும்
இருக்கலாம்...!!!