Tuesday, December 29, 2009

அக்கரை பச்சை!



என் நான்கு வயது குழந்தை 
கிழிந்த நூலாடையை சேலையாக 
உடுத்திக்கொண்டு_தன்னை
பெரிய மனுஷியாக பாவித்து
மகிழ்கிறாள்!!!!!!
அவளுக்குத் தெரியுமா?
என் குடிகார கணவன்,
எகிறும் விலைவாசி,
இரண்டுமாத வீட்டுவாடகை,
இவற்றையெல்லாம் மறந்து
நானும் குழந்தையாய் மாறத்
துடிக்கும் என் ஏக்கங்களை?

கடவுள் அமைத்து வைத்த மேடை


இரவு முடிந்ததும்
இனிமையாகத்தான் ஆரம்பிக்கிறது
என் ஒவ்வொரு அதிகாலையும்!

காலை எழுந்தவுடன்
"காபி போட இவ்வளவு நேரமா?"
அன்புக் கணவன் ஆரம்பித்து,
அடுக்களையில் எதிரொலித்து,
பிள்ளைகளை எழுப்பும் 
சுப்ரபாதமாய் ஒலிக்கும்
எங்கள் சண்டைகள்,
தம்தம் வேலைகளை
கவனித்துக்கொண்டே 
தொடர்கிறது!
அவரவர் வேலைக்கும்
பள்ளிக்குமாய் செல்ல
வெறிச்சோடி கிடைக்கிறது 
வீடு!!!!!

கடை செல்ல,
காய்கறி வாங்க,
பிள்ளைகளை படிக்க வைக்க
பள்ளிக்கு அனுப்ப,-தொலை
பேசி கட்டணம் கட்ட,
இப்படியாக அனைத்திற்குமாய்
காத்திருக்கிறது எங்கள் 
சண்டைகள்!!!

இன்றும் எழுகிறேன்
இனியாவது சண்டைகள் தொடர கூடாதென
இறைவனை வேண்டியபடியே!
ஆனாலும்........ 
எப்படியாவது கிடைத்து விடுகிறது
எங்களின் சண்டைகளுக்கான
விதைகள்!!!!!

இப்படிக்கு காதலி!



உயிரின் வலியை விட
உன் பிரிவின் வலி கொடுமையாக
தெரிகிறது எனக்கு!

படித்துறையில் அமர்ந்து நாம்
பேசிய நாட்களில் நீ போட்ட
கற்களை தேடத் தோன்றுகிறது
இப்பொழுதெல்லாம்!

ஒரு நிலாபொழுதில் என்
அம்மாவுக்குத் தெரியாமல்
கொண்டு வந்த புட்டுவை
உனக்கு கொடுக்கையில்
"உனக்காக எதுவும் செய்வேன் என்றாயே
உயிரை தருவாயா," எனக் கேட்டேன்
"மாட்டேன் - உன்னை
நேசிக்கவாவது நான்
சுவாசிக்க வேண்டுமே," என்றாய்!

நீர் கொண்டு செல்கையில்
குறுகிய பாலத்தில் நடக்கையில்
விழுந்துவிடுவேனோ என
பார்த்து பார்த்து நீ
அக்கறை பட்ட நாட்களை
நினைத்து ஏங்குகிறேன்!

என் பெற்றோர் உன்னை
ஏசியபோது மௌனமாகவே
நின்று கொண்டிருந்தாய்!

பின்னொருநாள்
என் கையை இறுகப்பற்றி
திரும்பி வருவேன் என்ற
வார்த்தை மட்டும் கூறி
விடை பெற்று சென்றாய்!

நீ வாங்கி தந்த கொலுசில்
ஒன்று விழுந்தவுடன் - நீயே
தொலைந்தது போல் ஒரு
உதறல் - இன்னமும் தேடிக்கொண்டே
இருக்கிறேன் தொலைந்த ஒற்றை
கொலுசை - உனக்காக
காத்துக் கொண்டிருப்பது போல்!


Monday, December 21, 2009

கோடைமழையாய் நீ!!!


மறக்க முடியவில்லை!
திருமணம் ஆனபோதும்
குழந்தைகள் பெற்றபோதும்
மாமனார்,மாமியார்
நாத்தனார்,ஓர்ப்படி_என
சுற்றங்கள் சூழ்ந்தபோதும்
அவ்வப்போது வரும் கோடைமழையாய்
உன் நினைவுகள்!
எதிர்படும் மண்வாசனையாய்
உன் முகம்!
மறக்கத்தான் முடியவில்லை!!!!!

நான் மற்றும் நீ!!!

அந்த ஆலமரம்
அந்த மாடியறை
அந்த வீதி 
அந்த சாலை என
ஒவ்வொரு இடம்
ஞாபகப்படுத்துகிறது
உன் நினைவை என 
கூறுகிறாய்!
உன்னை நினைவுபடுத்திக்கொள்ள
எந்த ஞாபகசின்னங்களும்
எனக்குத் தேவைஇல்லை
என் எல்லா அணுக்களிலும் நீ
நிறைந்திருப்பதால்!

தோழி எனும் பொக்கிஷம்!


ஏழு வயதென ஞாபகம்
பள்ளிக்கு முதல் நாள்
புதிதாய் வந்த என்னிடம்
பரிச்சயம் ஆனவள் போல்
ஒட்டிகொண்டாய் நீ!

பள்ளியில் உனக்கு தெரிந்த
இடத்துக்கெல்லாம் என்னையும்
இழுத்துச் சென்று ஆச்சரியமாய்
காண்பிப்பாய்-எனக்கும் அவைகள்
தெரியவேண்டுமென்று!

உன் வீட்டில் எது வாங்கி தந்தாலும்
ரகசியமாய் என்னை மட்டும்
கூப்பிட்டு காண்பிப்பாய்!

எனக்கு பட்டாம்பூச்சி பிடிக்கும் என்று
எங்கேயோ தேடி பிடித்து அதை மறைத்து
என் உள்ளங்கையில் வைத்து உன்
கையால் பொத்தி மெதுவாக திறந்தாய்

குறுகுறுவென ஏதோவொன்று இருகிறதே என
பார்ப்பதற்குள் பறந்து போன பட்டாம்பூச்சியை
அகல கண்திறந்து பார்த்தேன் - நீ
கை தட்டி மகிழ்ந்தாய்!

நம் இருவர் கையிலும் ஒட்டி சென்ற
வண்ணங்கள் நம் கன்னத்துக்கு
இடம் மாறியது...
கவிதையாக மாறியது அந்நாள்!

சண்டையிட்டு பேசாத
சமயங்களில் மௌனங்களும்
பேசிக்கொண்டு இருந்தன
நம்மிடையே!

பதினைந்து வயதில் வந்த
முதல் முகப்பருவை உன்னிடமே
முதலில் காண்பிக்க வேண்டுமென
கன்னத்தை மூடிக்கொண்டே
ஓடி வந்து உன்னிடம்
காண்பித்தபோது உன் வீட்டில்
எல்லோரும் சிரித்தார்கள் - நீ மட்டும்
வெட்கமாய் தொட்டு பார்த்தாய்!


மழை காலங்களில் சைக்கிளை
உருட்டி செல்லும்போது எங்கேயோ
ஒலித்து தேய்ந்து போன பாடலின்
மீதி வரிகளை நாம் பாடிக்கொண்டே
சென்ற நாட்கள் நம் மனதில்
மண்வாசனையாய்!

அத்தனை நினைவுகளும் சம்பந்தமே
இல்லாமல் இன்று விழுகின்றன
என் குழந்தைக்கு
கதை சொல்லும் இரவுகளில்!


Tuesday, December 15, 2009

உன் பார்வையில் நான்!!

அழகாய் இருக்கிறேன் என்கிறாய்
'தேங்க்ஸ்!'-இது
நீ என்னை சொன்னதற்காக அல்ல
நீ சொல்ல சொல்ல நான் 
அழகாய் ஆகிறேன்
அதற்காக!!!!!!